நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 'இ.ஓ.எஸ். 5' செயற்கைக்கோள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட் மூலம் பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள் நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
'ஜூசாட்-1 ஏ' என்று அழைக்கப்படும் 'இ.ஓ.எஸ். 5' பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து நாளை அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்டப் பணியான கவுன்ட்டவுன் நேற்று இரவே தொடங்கியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான மிக முக்கியமான தரவுகளை வழங்கக்கூடியது இச்செயற்கைக்கோள் ஆகும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.