20 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கு... தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவதா? சீமான் கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றாமல் கடந்த 20 ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கும் மத்திய அரசின் அலட்சியப் போக்கு வ கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தாய்மொழியில் நீதி பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்றும், தமிழ்நாட்டின் கோரிக்கையை உடனடியாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறு 348(2) மற்றும் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை, குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் மாநில மொழிகளை உயர்நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக்குவதற்குத் தெளிவான வழிவகை செய்கின்றன.
இதன் அடிப்படையில் கடந்த 1950, 1969, 1971 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் முறையே ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தி மொழி உயர்நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. வட மாநிலங்களில் மாநில மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தென்னிந்திய மற்றும் பிற மொழி மாநிலங்களின் கோரிக்கைகள் வேண்டுமென்றே முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட மாநிலங்களைப் போலவே மேற்கு வங்கம் (1997), தமிழ்நாடு (2006), குஜராத் (2012) மற்றும் கர்நாடகம் (2014) ஆகிய மாநிலங்களும் தங்களது மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரிக்கை விடுத்தன. உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, அக்கோரிக்கைகளைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் மத்திய அரசு தொடர்ந்து முடக்கி வைத்திருப்பது மொழிச் சமத்துவத்திற்கு எதிரான செயலாகும்.
கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு மே 21-ல் மத்திய அமைச்சரவையிலும் மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இருப்பினும், அத்தகைய தீர்மானங்கள் இருந்தும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது.
சட்டமன்ற ஒருமனதாகத் தீர்மானம்: தமிழ்நாட்டில் கடந்த 06.12.2006 மற்றும் 03.09.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டங்களில், தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல், தமிழ்நாடு அரசின் கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
நீதிமன்றத்தில் வழக்காடும் எளிய பொதுமக்களும் தமிழர்களும் தங்களது தாய்மொழியிலேயே வாதாடவும், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு எளிதாக நீதியைப் பெறவும் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவது இன்றியமையாதது என சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். இது வெறும் மொழி சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல; தமிழர்களின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை மற்றும் நீதிக்கான உரிமையை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமையாகும்.
இதற்கிடையே, தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் தமிழ்நாட்டின் பெருமை வாய்ந்த அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் தங்களைத் தரப்பினராக இணைத்துக்கொண்டு தமிழின் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கைக் கோப்பைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.