நாளை புயலாக வலுப்பெறும்... மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து, தற்போது மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கு திசையிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 960 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால், இதன் நகர்வை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
நாளை நவம்பர் 16ம் தேதி இது புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.