"அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது சரி தான்...” - நாராயணன் திருப்பதி!

 

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்குப் பாரதிய ஜனதா கட்சி  ஆதரவு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை விமர்சித்து வரும் திமுக தலைவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், பாஜக மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது சமூக ஊடகப் பக்கத்தில் விரிவான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

"முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாராயணன் திருப்பதி, தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யாமல், பல்வேறு ஊழல்களைப் புரிந்து மக்களைக் கொள்ளையடித்தது தான் திராவிட மாடல் ஆட்சி.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பேச்சு சுதந்திரத்திற்குப் பெரும் தடை விதிக்கப்பட்டது தான் ஜனநாயகமா என மு.க.ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளப் பதிவில், "திமுக ஆட்சியில் இருந்த போது தங்களுக்கு எதிராக வந்த மிகச் சிறிய விமர்சனங்களைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், நாளொரு கைதும் பொழுதொரு நடவடிக்கையுமாக அல்லவா காலத்தைக் கழித்தீர்கள், அது அதற்குள் மறந்து விட்டதா? எனவே, தற்பொழுது அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்திருப்பது மிகச் சரியான நடவடிக்கையே" என்று பதிவிட்டுள்ளார்.