undefined

"பிரதமர் வரவேற்பில் முதலமைச்சர் வராதது வருத்தம்; விரைவில் ஆட்சி மாற்றம் வரும்" - தமிழிசை

 

மதுரைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வராதது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். "நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும்போது, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நேரில் வந்து வரவேற்பதுதான் மரபு. ஆனால், பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் வராதது மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழக அரசு மக்கள் நலப்பணிகளை விட, விளம்பர அரசியலுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பேசிய அவர், "இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். திமுக அரசு வீட்டுக்குப் போய், புதிய ஆட்சி மாற்றம் வரும்" என நம்பிக்கை தெரிவித்தார். திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகள் மீது கடும் அழுத்தம் செலுத்தி வருவதாகவும், பல கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மாலை மதுரை மண்டேலா நகரில் நடைபெறவுள்ள பாஜக - அதிமுக மெகா கூட்டணிப் பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என அவர் கூறினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பது கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.