“ரீல்ஸ் போடுகிற அரசாக இல்லாமல் ரியல் அரசாக இருக்க வேண்டும்!” - சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின்

 

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புதிய அரசை விமர்சித்தும், மக்கள் நலத்திட்டங்களை வலியுறுத்தியும் உரையாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குறித்து உதயநிதி ஸ்டாலின் மிக முக்கியக் கோரிக்கையை முன்வைத்தார்.

"மாதந்தோறும் 15-ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரும் எனத் தமிழகப் பெண்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தைத் தவெக அரசு எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார். இத்திட்டம் பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருப்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி இதனைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

புதிய அரசைச் சாடிய உதயநிதி ஸ்டாலின், "இந்த அரசு வெறும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் அரசாக மட்டும் இருந்துவிடக் கூடாது; மக்களுக்குப் பணியாற்றும் ரியல் அரசாக இருக்க வேண்டும்" என விமர்சித்தார். தவெக அரசின் சமூக வலைதளப் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டி அவர் முன்வைத்த இந்த விமர்சனம் அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்துப் பேசிய அவர், "நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தாலும், இந்த அரசு வாக்கெடுப்பில் வெற்றி பெறப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், மக்களின் கோரிக்கைகளை அவையில் பதிவு செய்ய வேண்டியது எங்கள் கடமை" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பரஸ்பரம் சந்தித்துக்கொண்டது 'அரசியல் நாகரிகம்' எனப் பேசப்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் உதயநிதியின் இந்த விமர்சனமும், திட்டங்கள் குறித்த கோரிக்கையும் தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.