போதையில் ரோட்டில் மயங்கிக் கிடந்த ஐடி இளம்பெண், ஆண் நண்பர்கள் - பெண் போலீசாரின் துரித நடவடிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே, மதுபோதையில் நடக்க முடியாமல் சாலையிலேயே ஒரு இளம்பெண் மற்றும் வாலிபர்கள் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிப் பகுதிக்குத் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அருமனை – கலியல் பிரதான சாலையில் இளம்பெண் ஒருவரும், மூன்று வாலிபர்களும் கடுமையான மதுபோதையில் நடக்கக் கூட முடியாமல் தள்ளாடியபடி சாலையிலேயே படுத்துக் கிடந்துள்ளனர். அவர்களில் இரண்டு வாலிபர்களின் முகம் மற்றும் உடம்பில் பலத்த ரத்தக் காயங்கள் இருந்தன. அவர்களின் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் விழுந்து கிடந்தது.
அப்பொழுது அந்த வழியாகத் தனது பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் வந்த கடையாலுமூடு காவல் நிலைய பெண் ஏட்டு பிரேமலதா, வாலிபர்களுடன் இளம்பெண் ஒருவர் போதையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தப் பகுதி தனது காவல் எல்லைக்குட்பட்டது இல்லை என்ற போதிலும், மனிதநேய அடிப்படையில் உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை மீட்கச் சென்றார்.
பெண் போலீஸ் வருவதைக் கண்டவுடன், அங்கிருந்த மூன்று வாலிபர்களில் ஒருவன் நைசாகக் கூட்ட நெரிசலில் தப்பியோடிவிட்டான். மீதமிருந்த இருவரையும், இளம்பெண்ணையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப ஏட்டு பிரேமலதா முயன்றார். ஆனால், போதையில் இருந்த வாலிபர்கள் சிகிச்சைக்கு வர மறுத்து போலீசாரிடம் அடம் பிடித்துள்ளனர். அவர்கள் தப்பி ஓடாதவாறு ஏட்டு பிரேமலதா லாவகமாகப் பிடித்துக் கொண்டார்.
இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்கள் அருமனை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அருமனை போலீசார், போதையில் இருந்த இளம்பெண்ணைக் குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், காயமடைந்த 2 வாலிபர்களை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த வாலிபர்களில் ஒருவர் அருமனையைச் சேர்ந்தவர், மற்றொருவர் தென்காசியைச் சேர்ந்தவர். மயங்கிக் கிடந்த இளம்பெண் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஜூலை 5-ஆம் தேதி திற்பரப்புக்குச் சுற்றுலா வந்த இவர்கள், அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
திற்பரப்பு பகுதிகளைச் சுற்றிப் பார்க்கச் சென்ற போது அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்களா? அல்லது அவர்களுக்குள் ஏதேனும் மோதல் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் அருமனை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.