"நான் சென்ற பிறகுதான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் அதிகரிப்பு"... இளையராஜா பேச்சு!

 

சென்னையில் நடைபெற்ற 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பம் வெளியீட்டு விழாவில், இசைஞானி இளையராஜா திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் தனது ஆன்மீக அனுபவங்கள் குறித்துப் பேசிய கருத்துகள் வைரலாகி வருகின்றன.

1980 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக இளையராஜா குறிப்பிட்டார். "நான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதைப் பார்த்து தான், அங்கே அதிகமான மக்கள் கிரிவலம் வரத் தொடங்கினார்கள் என்று அங்கிருந்த அடியார்கள் கூறுவார்கள்" எனத் தெரிவித்தார்.

பௌர்ணமி நாட்களில் தாம் திருவண்ணாமலை சென்று இறங்கினாலே அங்கு மழை பெய்யத் தொடங்கும் என்று சுவாமிகள் கூறியதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைத்ததுமே செருப்பு அணிவதைத் தவிர்த்து விட்டதாகக் கூறிய இளையராஜா, நடுப்பாதையிலேயே நடந்து செல்வார் என்றும், அப்போது காலில் முள் குத்தும் போது தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

அடிப்பாதையில் வலம் வந்து அமரும் தருணங்களில் லிங்கத்துடன் இணைந்த உணர்வு ஏற்படும். அப்படி ஒரு முறை கிரிவலம் முடித்து வீட்டிற்கு வந்த பிறகு 3 மாதங்கள் கால்களை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னரே 'பாடிக் கிடைத்த பரம்பொருளே' என்ற பாடல் தமக்குள் உதித்ததாகத் தெரிவித்தார்.

"அந்தப் பாடல் நான் எழுதிய தமிழா என்று எனக்கே வியப்பாக இருந்தது; அது இறைவன் எனக்கு அளித்தக் கொடை" என்று நெகிழ்ந்த இளையராஜா, இசையே தெய்வீகக் கலை என்றும், ஆன்மிகம் என்பது தனியாகக் கிடையாது, நமது வாழ்வே ஆன்மிகம் தான் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.