“ஸ்கெட்ச் போட்டது டிரம்ப் இல்லை; நான் தான்..” - அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி
ஈரான் மீதான அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்கள் மற்றும் ஈரான் அதிபர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களை இலக்கு வைத்தது குறித்த பரபரப்பான பின்னணித் தகவல்களை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் வெளியிட்டுள்ளார். ஈரானைத் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்தது தான்தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இலக்கு வைத்து ஈரான் மேற்கொண்டு வரும் கொலை முயற்சிகளுக்குப் பதிலடியாகவே, ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் இது குறித்துக் கூறுகையில், ஈரானைத் தாக்குவதற்கான திட்டங்கள் குறித்து அதிபர் டிரம்ப் கூட அதிகம் பேசவில்லை. ஆனால், டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் முயற்சிப்பது எங்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தெரியும். அதனால்தான், இந்தத் தாக்குதலுக்கான திட்டத்தை நானே வகுத்து, அதற்கு யார் காரணமோ அவர்களை இலக்குப் பட்டியலில் சேர்த்தேன்.
உலகின் எந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கரை அச்சுறுத்தினாலும் அல்லது கொன்றாலும், எவ்விதத் தயக்கமுமின்றி அவர்களை வேட்டையாடிக் கொல்வோம். "அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம்" எனக் கூறி வந்த ஈரானிய ஆட்சிக்கு, தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இருந்து "மரணமே" பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை நினைவுபடுத்திய ஈரான் தலைமை, "இந்த முறை டிரம்ப் தப்ப முடியாது" எனப் பேசியிருந்தது. இதுவே அமெரிக்காவைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இந்தப் போர் ஆட்சி மாற்றத்திற்கான போர் அல்ல என்றாலும், தற்போது ஈரானில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் மூலம் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகமே நன்மையடைந்துள்ளது என அமெரிக்கா கருதுகிறது. "நாங்கள் போரைத் தொடங்கவில்லை, ஆனால் டிரம்ப் அரசின் கீழ் இந்தப் போரை நாங்கள் முடித்து வருகிறோம்" என ஹெக்சேத் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 முதல் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களில் ஈரானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தகர்த்த வீடியோ ஏற்கனவே வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.