ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது... ரயில் டிக்கெட் ரத்து முறையில் பெரிய மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் நடைமுறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. இதுவரை இருந்த நடைமுறைகளை விட, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் மிகவும் கடுமையானவை. குறிப்பாக கடைசி நேரத்தில் பயணத்தைத் தவிர்க்கும் பயணிகளுக்கு ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் ‘Zero Refund’
புதிய விதியின்படி, உங்கள் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால், நீங்கள் செலுத்திய பயணக் கட்டணத்தில் ஒரு பைசா கூட திரும்பக் கிடைக்காது. இதற்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு வரை ஒரு குறிப்பிட்ட தொகையைத் திரும்பப் பெறும் வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள்
ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து 8 மணி நேர இடைவெளிக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், உங்கள் டிக்கெட் தொகையில் 50% மட்டுமே திரும்பக் கிடைக்கும். மீதி 50% தொகை மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.
72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள்
பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து 24 மணி நேர இடைவெளிக்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், மொத்த கட்டணத்தில் 25% பிடித்தம் செய்யப்படும். மீதமுள்ள 75% தொகை மட்டுமே உங்கள் கணக்கிற்குத் திரும்ப வரும்.
72 மணி நேரத்திற்கு முன்னதாக
ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே அதாவது 3 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு ரத்து செய்தால் மட்டுமே, தற்போதுள்ள குறைந்தபட்ச ரத்து கட்டணத்தைப் பிடித்தம் செய்து விட்டு மீதித் தொகையைப் பெற முடியும்.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
இந்திய ரயில்வே இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கல் கூறப்படுகின்றன.தரகர்களைக் கட்டுப்படுத்தவும், இருக்கைப் பயன்பாட்டை அனைவருக்கும் உறுதி செய்யவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது குறித்து கூறுகையில், தரகர்கள் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் விற்காத டிக்கெட்டுகளை ரத்து செய்து ரீஃபண்ட் பெறுவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதே போன்று கடைசி நேர ரத்துகளால் ரயில்களில் காலியாக இருக்கும் இருக்கைகளைத் தவிர்த்து, காத்திருப்போர் பட்டியலில் உள்ள உண்மையான பயணிகளுக்கு அந்த இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இது உதவும் எனக் கருதப்படுகிறது.
பிற முக்கிய மாற்றங்கள்
இனி பயணிகள் தங்களது போர்டிங் ஸ்டேஷனை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை மாற்றிக் கொள்ளலாம். இது பயணிகளுக்கு ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும். வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அமிர்த் பாரத் போன்ற பிரீமியம் ரயில்களுக்கு ஏற்கனவே ஜனவரி 2026 முதல் இந்த கடுமையான விதிகள் அமலில் உள்ளன. இப்போது இவை அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே, வரும் ஏப்ரல் 1-க்குப் பிறகு பயணம் செய்பவர்கள் தங்களது பயணத் திட்டத்தில் மாற்றம் இருந்தால், பண இழப்பைத் தவிர்க்க 3 நாட்களுக்கு முன்பே ரத்து செய்வது நல்லது.