அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது... மின் கட்டண கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மின் கணக்கீட்டாளர் பணியிடங்களால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைத் தவிர்க்கும் வகையில், மின் கட்டண கணக்கீட்டுப் பணியைத் தற்காலிகமாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. இதன் காரணமாகத் தொடர்ந்து மின் கணக்கீட்டுப் பணிகளில் குளறுபடிகளும் தாமதங்களும் ஏற்பட்டு, மின் கட்டணம் திடீரென அதிகரித்ததாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், மின் கட்டண கணக்கீட்டுப் பணிகளை அடுத்த 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் வழங்குமாறு தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் அதிகாரப்பூர்வச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக வரவிருக்கும் அக்டோபர் மாதம் முதல் 6 மாதங்களுக்கு வரையறுக்கப்பட்ட டெண்டர் (Limited Tender) முறையில் தகுதியான தனியார் நிறுவனங்களுக்கு மின் கணக்கீடு செய்யும் பணி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கணக்கீட்டுப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.