இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிவதற்குத் தடை - பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவிப்பு!
இத்தாலி நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் புர்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும் ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற 'பிரதர்ஸ் ஆப் இத்தாலி' கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் பேசிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பள்ளிகளுக்கு வரும் மாணவிகள் தங்களின் முகத்தை மறைக்காமல் வெளிப்படையாக வர வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாரம்பரியம் என்ற பெயரில் இளம் பெண்கள் முகத்தை மறைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், முழு உடலையும் மூடும் புர்கா மற்றும் கண்களைத் தவிர மற்ற பகுதிகளை மூடும் நிகாப் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என்றார். அதேசமயம், தலைமுடியை மட்டும் மூடும் ஹிஜாப் அணிவதற்கு இதில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
புர்கா தடை மட்டுமின்றி, வகுப்பறைகளில் இத்தாலிய மொழி தெரியாத வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. ஒரு வகுப்பில் வெளிநாட்டு மாணவர்கள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது. தற்போது இத்தாலி பள்ளிகளில் சுமார் 11.6 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி நடைமுறைகளோடு ஒத்துப்போவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள், கட்டாயமாக இத்தாலிய மொழியைக் கற்க வேண்டும் என்ற நிபந்தனையும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மெலோனி அறிவித்துள்ள இந்தத் திட்டம் தற்போது ஒரு சட்ட முன்மொழிவு மட்டுமே ஆகும். இது விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பிறகு 60 நாட்களுக்குள் இத்தாலி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும். இத்தீமானம் தற்போது இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.