பெரும் சோகம்... ஐரோப்பாவில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!
பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலையின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தகிக்கும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உடலைக் குளிர்விக்கவும் நீர்நிலைகளை நாடிய சுமார் 40 பேர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைகால வெப்பம் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தத் தொடர் மரணங்கள் அந்நாட்டு அரசாங்கங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐரோப்பியக் கண்டத்தின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக நடப்பு கோடைகாலத்தில் வெப்பத்தின் அளவு மிகத் தீவிரமாகப் பதிவாகி வருகிறது. இதனால், குளிர்ச்சியான சூழலைத் தேடிப் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெருமளவில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.
பல்வேறு நீர்நிலைகளில் உள்ள ஆபத்தான பகுதிகளை அறியாமலும், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் நீரில் இறங்கியதால், கடந்த சில நாட்களில் மட்டும் வெவ்வேறு இடங்களில் சுமார் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர் அசாம்பாவிதங்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் செபாஸ்டின் லெகோர்னு பொதுமக்களுக்கு அவசரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் நீர்நிலைகளுக்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாத மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட ஆபத்தான நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், வெப்ப அலையின் பாதிப்பிலிருந்து தப்பிக்கப் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்கவும் ஐரோப்பிய நாட்டு மக்களுக்கு அந்தந்த நாட்டு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.