பெரும் சோகம்... புதுமணத் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!

 

திருமணமான ஒரே மாதத்தில் புதுமணத் தம்பதியர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய இவர்களது மரணம், இரு வீட்டாரையும் நிலைகுலையச் செய்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தன்று காலை வெகுநேரமாகியும் தம்பதியின் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது இருவரும் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதம் ஏதும் கிடைக்காததால், குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

புதுமணத் தம்பதியின் செல்போன் உரையாடல்கள் மற்றும் அவர்களது நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சியாகத் தொடங்க வேண்டிய இவர்களது வாழ்க்கை, இவ்வளவு சீக்கிரம் மரணத்தில் முடிந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்றும், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உரிய ஆலோசனை பெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர்.