“அத்தனையும் பொய்யா கோபா...ல்ல்ல்”... இந்தியில் பேசி கவனம் ஈர்த்த வைகோ மகன் துரை வைகோ!

 

ஒரு தலைமுறை தமிழர்களை இந்தி கற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என்றால், அதில் பெரும்பங்கு இப்போதைய மதிமுக நிறுவனர் வைகோவைச் சேரும். வைகோவின் தமிழ் உரைவீச்சும், இந்தி எதிர்ப்பும் அத்தனை தீவிரமாக இருந்தது. அவரது பேச்சைக் கேட்ட பலர், இந்தி திரைப்படங்களைப் பார்ப்பதைக் கூட புறக்கணித்தனர்.  இந்நிலையில், ஒருபக்கம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திக்க் கொண்டே தலைவர் அவருடைய மகனை இந்தி கத்துக்க வெச்சிருக்காரேப்பா... என்று இணையத்தில் புலம்புகின்ரனர் மதிமுகவினர். அது இன்னொரு மொழி தான்.. அவசியமெனில் இந்தி மட்டுமல்ல சீன, ரஷ்ய மொழியிலும் பேசுவோம் என்று அடுத்த தலைமுறையாவது புரிந்துக் கொண்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வு சிறக்கும்.

மதிமுக தலைவர் வைகோவின் மகனும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ, டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்தி கலந்த ஆங்கிலத்தில் (ஹிங்லீஷ்) பேசியது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அக்டோபர் 31-ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய துரை வைகோ, முதலில் ஆங்கிலத்தில் தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

பின்னர், “எனக்கு இந்தி தெரியாது. ஆனால் தமிழ்நாடு என்ன சொல்ல விரும்புகிறது என்பதை நாடு அறிய வேண்டும்” என்று கூறிய அவர், ஹிங்லீஷில் பேசப் போவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், அரசியலமைப்பும் ஜனநாயகமும் காக்கப்பட வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்தார்.

இந்தி திணிப்புக்கு எதிராக வைகோ தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அவரது மகன் இந்தி கலந்த உரையாற்றியது குறித்து இணையத்தில் விவாதம் எழுந்துள்ளது. சிலர் விமர்சனங்களைப் பதிவிட, அவரது பேச்சு கவனம் பெற்றதாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன.