18 வருஷமாச்சு... ஐபிஎல் விளையாட்டில் இன்றும் முறியடிப்படாமல் 'ஒற்றை' சாதனையாக நீடிக்கும் கும்ப்ளேவின் மேஜிக்!

 

ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இந்தத் தருணத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவின் இந்தச் சாதனை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 18 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியைச் சேர்ந்த ஒரு வீரர் 'ஆட்டநாயகன்' (Player of the Match) விருது பெற்றது இதுவே முதல் மற்றும் கடைசி முறையாகும்.

அந்த வரலாற்றுப் போட்டி மே 24, 2009ல் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்தது. ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது, கும்ப்ளே 4 ஓவர்கள் பந்துவீசி, 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

முதலில் பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட்டை முதல் ஓவரிலேயே 'டக் அவுட்' செய்து கும்ப்ளே அதிரடி காட்டினார். பின்னர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ரோஹித் சர்மா மற்றும் வேணுகோபால் ராவ் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியை 143 ரன்களுக்குள் முடக்கினார்.

இருப்பினும், 144 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய RCB அணி, 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. கோப்பையை இழந்தாலும், அந்தப் போட்டியின் மிகச்சிறந்த தனிநபர் செயல்பாட்டிற்காக கும்ப்ளேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பொதுவாக எந்தவொரு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும், வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த வீரருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். ஆனால், கும்ப்ளேவின் அந்தப் பந்துவீச்சு அத்தனைத் துல்லியமாகவும், ஆதிக்கத்துடனும் இருந்ததால் நடுவர்கள் இந்த விதிவிலக்கான முடிவை எடுத்தனர்.

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மார்ச் 28 அன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.