"ஓடி ரொம்ப நாளாச்சுனு சிரிச்சுட்டே சொன்னார் முதல்வர் விஜய்" - மாரத்தான் சுவாரசியங்களை பகிர்ந்த வீராங்கனை பவானி தேவி!

 

சென்னையில் நேற்று நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் விஜய் தங்களுடன் எவ்வித பந்தாவும் இன்றி மிகவும் சகஜமாகப் பழகிய நெகிழ்ச்சியான அனுபவங்களை இந்தியாவின் புகழ்பெற்ற சர்வதேச வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட 'Start Run, Stop Drugs' மாரத்தான் ஓட்டத்தில் பொதுமக்களுடனும் விளையாட்டு வீரர்களுடனும் இணைந்து முதலமைச்சர் விஜய் ஓடினார். இந்த ஓட்டத்தில் பங்கேற்ற பவானி தேவி, ஓட்டத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

"மாரத்தான் தொடங்கிய போது முதலமைச்சரைச் சுற்றிப் பல அடுக்கு விஐபி பாதுகாவலர்கள் இருந்தனர். பொதுமக்களின் கூட்டமும் மிக அதிகமாக இருந்ததால், என்னால் முதல்வருக்கு அருகில் வர முடியாமல் கொஞ்சம் பின் தங்கிவிட்டேன். நான் பின் தங்கியதை ஓடிக்கொண்டே கவனித்த முதலமைச்சர் விஜய்யும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவும் உடனடியாகத் தங்களது பாதுகாவலர்களிடம் கூறி, என்னை கூட்டத்திலிருந்து முன்னே அழைத்து வரச் செய்தனர்" என்றார்.

மாரத்தான் ஓட்டத்தின் இடையே முதலமைச்சருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து பவானி தேவி விவரிக்கையில், "தொடர்ந்து ஓடியதால், வழியில் இரண்டு இடங்களில் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு முதல்வர் விஜய் ஓய்வெடுத்தார். அப்போது எங்களிடம் மிகவும் இயல்பாகப் பேசிய அவர், ‘ஓடி ரொம்ப நாளாச்சுல்ல... அதாம்மா கொஞ்சம் டயர்டா இருக்கு' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சருடன் இவ்வளவு நெருக்கமாக அமர்வதற்கும் பேசுவதற்கும் தமக்கு ஆரம்பத்தில் சற்றுத் தயக்கமாக இருந்ததாகப் பவானி தேவி குறிப்பிட்டார். "அவர் ஒரு முதலமைச்சர் என்பதால் அருகில் அமர எனக்குப் பெரிய தயக்கம் இருந்தது. ஆனால், அவரோ எங்களைப் போன்ற சாதாரண விளையாட்டு வீரர்களுடன் எந்தவிதப் பாகுபாடும் இன்றி, ஒரு நண்பரைப் போலச் சகஜமாகப் பேசினார்.

ஓட்டத்தின் நிறைவில், ‘சார்... உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும்' என்று கேட்டேன். அவர் சற்றும் யோசிக்காமல் உடனடியாகப் புன்னகையுடன் ‘ஓகே' சொல்லி என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்" என்று பவானி தேவி மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்த எளிய அணுகுமுறையும், விளையாட்டு வீரர்களை அவர் மதிக்கும் பண்பும் தங்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக உள்ளதாகப் பேரணியில் பங்கேற்ற பிற வீரர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.