‘ஆறு மாசம் தான்.. இந்த ஆட்சியை நீடிக்க விட மாட்டோம்; ஒட்டக பேர அரசியல்!’  - கைதுக்குப் பின் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்!

 

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தவெக அரசுக்குக் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். "இந்த ஆட்சி இன்னும் 6 மாதங்கள் கூட நீடிக்காது; நாங்களும் நீடிக்க விடமாட்டோம்" என்று மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் ஆக்ரோஷமாகப் பேட்டியளித்தார்.

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனைத் தூத்துக்குடி தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு முன்பாகச் சென்னை அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

"என்னை தவெகவில் வந்து இணையுமாறு அவர்கள் தரப்பில் இருந்து பல்வேறு வழிகளில் தூது அனுப்பினார்கள். ஆனால், தவெக அரசின் குதிரை பேர அரசியல் திராவிட முன்னேற்றக் கழகத்தினரிடம் ஒருபோதும் நடக்காது. தமிழ்நாட்டில் தற்போது நடப்பது குதிரை பேரமல்ல, ஒட்டக பேரம்" என்று கடுமையாக விமர்சித்தார்.

"திமுகவின் எந்தவொரு தொண்டனும் எதற்கும் அஞ்ச மாட்டான். எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் அழைத்துச் சற்றும் அஞ்சாமல் தைரியமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். தலைவர் கொடுத்த அந்தப் பேரியக்கத்தின் தெம்போடு, தவெக அரசின் எந்தவொரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையையும் சட்டப்படி சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்."

தொடர்ந்து தவெக அரசின் ஆயுள் காலம் குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியை முற்றிலுமாக எகத்தாளம் செய்யும் வகையில் சவால் விடுத்தார். "நேற்று முன்தினம் வந்த ஒரு கத்தரிக்காய் கட்சிக்கு அரை நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட திமுக பயப்படுமா? தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த ஆட்சி இன்னும் 6 மாதங்கள் கூடத் தாங்காது. இந்த ஆட்சியை 6 மாதங்களுக்கு மேல் தமிழ்நாட்டில் நாங்கள் நீடிக்கவும் விட மாட்டோம்" என்று கூறினார்.

மேலும் காவல்துறையின் கைது நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், "இவ்வழக்கு தொடர்பாக வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நான் தயாராகவே இருந்தேன். ஆனால், எங்களை மிரட்டிப் பயம் காட்ட வேண்டும் என்பதற்காகவே நள்ளிரவில் திட்டமிட்டு என்னை அவசரமாகக் கைது செய்துள்ளனர். ஒருவேளை சிறையிலோ அல்லது போலிஸ் காவலோ என்னை அவர்கள் தாக்க முயன்றால், நான் திருப்பித் தாக்கக் கூடத் தயங்கமாட்டேன்" எனப் போலிசாருக்கும் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.