"என் மகன் தான்... வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்...!" - டிஎன்ஏ ரிசல்ட்டுக்குப் பின் குழந்தையை ஏற்றுக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், டி.என்.ஏ (DNA) பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குழந்தையைத் தனது சொந்த மகனாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாக, கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜாய் கிரிசில்டா தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக்கிவிட்டுத் தவிக்க விட்டுவிட்டதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு 'ரகா ரங்கராஜ்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், தன்னை மிரட்டிப் பணம் பறிக்கவே இது போன்ற புகார்கள் அளிக்கப்படுவதாகவும் ரங்கராஜ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பரிசோதனை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜாய் கிரிசில்டா தற்போது ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், "டி.என்.ஏ முடிவுகளுக்குப் பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் ரகாவைத் தனது மகனாக முழுமையாக ஏற்றுக்கொண்டார். வாழ்நாள் முழுவதும் அவன் கூடவே இருப்பேன் என்றும், மகனை ஒருபோதும் விட்டுச் செல்ல மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் திருப்பம் மற்றும் ரங்கராஜின் முடிவு குறித்துச் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், "இனிமேல் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என ஜாய் கிரிசில்டா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.