“அண்ணன் திருமாவளவனிடம் இருந்து கண்ணீர் மட்டும் தான் வரலை... எவ்வளவு வலியோடு பேசியிருப்பார்?” - ஆதவ் அர்ஜுனா

 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவில் நிலவி வரும் தொகுதி உடன்பாடு இழுப்பறி நிலை குறித்து பேசியுள்ள கருத்துகள் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ரஜினி குறித்து ஆதவ் பேசிய கருத்துக்கள் எழுப்பிய சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்த நிலையில், விசிகவுடனான தொகுதி எண்ணிக்கை இன்னும் உடன்பாடு எட்டாததால், “அண்ணன் திருமாவளவனிடம் இருந்து கண்ணீர் மட்டும் தான் வரவில்லை. எவ்வளவு வலியோடு பேசியிருப்பார்? ” என்று திமுக கூட்டணி குறித்து ஆதவ் விமர்சித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை பாஜக தனது தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயாராக இருந்தது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. விஜய் தனது 'மதச்சார்பற்ற' கொள்கையை விட்டு வெளியே வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக முன்வந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தனது கொள்கையில் உறுதியாக இருந்ததால் தான், அவரது 'ஜனநாயகன்' திரைப்படம் முடக்கப்பட்டுள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். "விஜய் மட்டும் பாஜகவுடன் சமரசம் செய்து பேசியிருந்தால், அந்தப் படம் அப்போதே ரிலீஸாகி இருக்கும். அதன் மூலம் விஜய் சுமார் ₹1500 கோடி சம்பாதித்திருப்பார். ஆனால், அவர் பணத்தை விடக் கொள்கைக்கே முக்கியத்துவம் தந்தார்" என அவர் தெரிவித்தார். தவெக மற்றும் பாஜக இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு பிம்பத்தை திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கின. இதற்குப் பதில் சொல்லாமல் விஜய் அமைதியாக இருப்பதற்குக் காரணம், அவர் எதற்கும் பயப்படவில்லை என்பதுதான் என ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் மிகுந்த வலியோடு பேசி வருவதாகவும், திமுக மற்றும் அதிமுகவின் கடும் நெருக்கடிகளை எதிர்த்து விஜய் தற்போது துணிச்சலாகப் போராடி வருவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தவெக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்ற கட்டமைப்பை திமுக, அதிமுக, பாஜக என மூன்று பேரும் சேர்ந்து உருவாக்கினார்கள். நம் அண்ணன் விஜய் அதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால், யார் மிரட்டுகிறாங்களோ அவங்கதான் பயப்படுறாங்கன்னு அர்த்தம். யார் அமைதியாக இருக்கிறாரோ அவங்க தைரியமாக இருக்கிறாங்கன்னு அர்த்தம். அண்ணன் திருமாவளவனிடமிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. எவ்வளவு வலியோடு பேசியிருப்பார்? திமுக, அதிமுக கடும் நெருக்கடியை எதிர்த்து விஜய்
போராடுகிறார்” என்றார்.