"வெளியே வீராவேசம்.. அவையில் பதுங்குவது ஏன்?" - நீங்க "டம்மி சிஎம்"ன்னு மக்களுக்குத் தெரியக்கூடாது என்கிற பயமா? - திமுக ஆவேசம்!
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான திமுக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தங்களின் விமர்சனக் கணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலை துண்டிக்கப்பட்டது மற்றும் முக்கியக் கேள்விகளுக்கு அரசிடமிருந்து பதில் வராததை முன்வைத்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடியுள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் நேரலை செய்யப்படும் என்று தவெக அமைச்சர் ராஜ்மோகன் நேற்று பேரவையில் வீரவசனம் பேசியிருந்ததை திமுக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரம் கூட நிறைவடையாத சூழலில், இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகத் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
"தாங்கள் ஒரு டம்மி முதலமைச்சர் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்ற பயத்தில்தான் நேரலையைத் தவெக அரசு கட் செய்துள்ளது" என்று திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களான 'மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை' மற்றும் 'விவசாயப் பயிர்க்கடன் முழு தள்ளுபடி' ஆகியவை குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அவையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்குச் சம்பந்தப்பட்ட சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியோ அல்லது கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜோ எந்தவொரு பதிலும் அளிக்காமல் மௌனம் காப்பதாகத் திமுக சாடியுள்ளது. மேலும், மேகதாது விணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் எவ்விதக் கருத்தும் பேசாமல் இருப்பதை "இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலையா?" எனத் திமுக ஐடி விங் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எழுப்பிய கேள்விக்கு, உள்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் அமைதியாக அமர்ந்திருந்ததை திமுக கடுமையாக விவாதித்துள்ளது.
"வெளியே பொதுக்கூட்டங்களில் வீராவேசமாகப் பேசும் முதலமைச்சர் விஜய், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி கேட்கும் பேரவையில் இப்படி பம்மி, பதுங்குவது ஏன்? 'பதில் தெரியாதவன்கிட்ட கேள்வி கேட்டா, தேடிப்பிடித்து தப்பாவாவது பதில் சொல்லுவான், எனக்கு கேள்வியே தெரியாதே' என்ற நடிகர் கமல்ஹாசனின் சினிமா வசனம்தான் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்களைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது." என்று விமர்சித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் விஜய் அம்பலப்பட்டு நிற்கிறார் என்றும் திமுக தனது எக்ஸ் பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளது. சட்டமன்ற நேரலை நிறுத்தம் மற்றும் திமுகவின் இந்த "டம்மி சிஎம்" என்ற நேரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.