"அவரைப் பார்க்கவே வேதனையாக இருக்கு" - நல்லகண்ணு உடல்நிலை குறித்து திருமாவளவன் உருக்கம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐயா நல்லகண்ணுவை நேற்று இரவு நேரில் சந்தித்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுவுக்கு, தற்போது வயது மூப்பு காரணமாகச் சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சிறுநீரகத்தில் உப்பு அதிகரித்திருப்பது அவருக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தொண்டையில் 'ட்ரக்கியோஸ்டமி' செய்யப்பட்டு, நேரடியாக மூச்சுக் குழாய் வழியாகச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இரைப்பை வழியாக நேரடியாக உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லகண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும், இருப்பினும் அவரை மீட்டெடுக்க மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். "எப்போதும் தடகாதிரமான உடல் வாகு கொண்டவர் ஐயா நல்லகண்ணு. ஆனால், தற்போது அவர் உடல் நலிவுற்று இருக்கும் காட்சியைப் பார்ப்பதற்கு மனம் மிகுந்த வேதனையடைகிறது. 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதே ஒரு சாதனைதான். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று விழைகிறோம்" என உருக்கத்துடன் பேசினார்.
தமிழக அரசியலில் நேர்மையின் அடையாளமாகத் திகழும் 101 வயது நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக வேண்டும் எனப் பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.