“இனிப்பு கடையில் பசியோடு வெளியேறினால் சோகம்..” - நடிகைகளுடனான உறவு குறித்து நடிகர் கோவிந்தா பதில்!

 

தனது மனைவி சுனிதா அகுஜா தன் மீது சுமத்திய தொடர் துரோகக் குற்றச்சாட்டுகளுக்குப் பிரபல இந்தி நடிகர் கோவிந்தா அளித்துள்ள பதில், அவர் தனது தவறை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறாரோ என்ற விவாதத்தைப் பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது.

63 வயதாகும் கோவிந்தா, தற்போது நடித்து வரும் புதிய திரைப்படத்தின் கதாநாயகி கோமல் ராணி சுவாங்கருடன் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுனிதா அகுஜா, "இளம் வயதில் தவறுகள் நடந்தன, ஆனால் 63 வயதில் இதையெல்லாம் கேட்பது சரியாக இருக்காது; கோமல் என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக உள்ளது" எனக் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 1990-களிலேயே சக நடிகையுடன் சேர்ந்து தன்னை கோவிந்தா ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய கோவிந்தா, "சுனிதா தன் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் அன்பின் வெளிப்பாடே. குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்த்தவர் அவர், என்னை 4 வார்த்தை புகழ்ந்தால் ஒரு விமர்சனமும் வைப்பார்" என மனைவியைப் பெருமையாகப் பேசினார். சக நடிகைகளுடன் உருவான 'கெமிஸ்ட்ரி' தான் பல வெற்றிப் பாடல்களுக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், அது அன்பிற்கான பிணைப்பு மட்டுமே என்று விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாம் ஒரு இனிப்பு கடையில் நிற்கிறோம், அங்கேயே பசியுடன் தொடர்ந்து இருந்துவிட்டு வெளியேறினால் அதை விடச் சோகம் வேறு எதுவும் இல்லை. 34 வயது வரை நான் அப்பாவியாக இருந்ததற்காக வருத்தப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார். இவரது இந்த விசித்திரமான பதில், மனைவியின் குற்றச்சாட்டுகளை அவர் உண்மை என ஏற்றுக்கொள்வது போல அமைந்துள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.