நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்... தவறான எஸ்.எம்.எஸ்.ஸால் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!

 

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஒரு தவறான எஸ்.எம்.எஸ். தகவலால் இரண்டு இளம் உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், ஒரு சிறிய வதந்தி எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சி. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமண பந்தத்தில் இணையவிருந்த சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவரின் மரணம், உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சூரஜ் மற்றும் கோமலுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்த சூழலில், யாரோ ஒரு மர்ம நபர் அனுப்பிய தவறான மெசேஜ் சூரஜின் மனதை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் சூரஜ் தற்கொலை செய்துக் கொண்டார். சூரஜின் மரணம் குறித்த செய்தியைக் கேட்டு அவரது வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்ற கோமலை, அங்கிருந்தவர்கள் தரக்குறைவாகப் பேசியும், பழிச்சொற்களால் காயப்படுத்தியும் உள்ளனர். ஏற்கனவே திருமணம் நடக்க இருந்த நிலையில், தனது காதலனை இழந்த துயரத்தில் இருந்த கோமல், மற்றவர்களின் பேச்சுக்களைத் தாங்க முடியாமல் விஷம் குடித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். 

வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடி வந்தாலும், முதலில் பெற்றோரிடம் பகிருங்கள். ஒரு நிமிட அவசர முடிவால் இரண்டு குடும்பங்கள் தங்களது பிரிய மகனையும், மகளையும் இழந்து தவிக்கிறது. ஒருவரின் மனநிலை தெரியாமல் மற்றவர்கள் வீசும் பழிச்சொற்கள், ஒரு கொலையை விட மோசமானது என்பதற்கு கோமலின் மரணமே சாட்சி.

உதவிக்கு: மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், தமிழக அரசின் இலவச உதவி எண் 104 அல்லது சினேகா ஹெல்ப்லைன் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.