தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் பங்கேற்பு.. பாபநாசம் ஷாஜகான் அமைச்சராகிறார் - காதர் மொகிதீன் அறிவிப்பு!

 

தமிழகத்தில் அமையவுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக இடம்பெறும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சற்றுமுன் அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, தவெக கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கியக் கட்சியும் அமைச்சரவையில் பங்கெடுக்கிறது.

முன்னதாக, தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகள் இடம்பெற வேண்டும் எனத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், "நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் தவெக அரசுக்கு நாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவளித்தோம். எவ்வித பதவியையும் நாங்கள் கேட்கவில்லை. எனினும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களை அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பது தவெக-வின் பெருந்தன்மையைக் காட்டுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் தேசியத் தலைமை, உயர்மட்டக் குழு மற்றும் சமுதாயத் தலைவர்களுடன் இன்று காலை நடத்திய தீவிர ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சரவையில் பங்கேற்கும் இறுதி முடிவை ஐயூஎம்எல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொகிதீன், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ ஷாஜகான், தவெக அமைச்சரவையில் புதிய அமைச்சராகப் பதவியேற்பார்.

தற்போதைய சூழலில் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகானை முதற்கட்டமாக அமைச்சராக்குவது என்றும், கூட்டணியில் மற்றொரு அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெறுவது குறித்தும் கட்சிக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ் (2 அமைச்சர் பதவிகள்) மற்றும் ஐயூஎம்எல் (1 அமைச்சர் பதவி) ஆகிய கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு வலுவான கூட்டணி ஆட்சியை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு முன்னெடுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.