“15 ஆண்டுகளாகக் கத்துகிறேன்... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” - சீமானின் தேர்தல் முழக்கம் துவங்கியது!

 

நாம் தமிழர் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களுக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு மக்களிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உரையில் சீமான், "மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மக்கள் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். 15 ஆண்டுகளாக மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் எனக்கும் வாய்ப்பு கொடுங்கள். நானும் 15 வருடங்களாக அரசியலைக் கத்துகிறேன். உண்மையான 'பிக் பாஸ்' நான்தான். எனது ஆட்சியில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது."

தம்பி விஜய் அறிவித்துள்ள இலவசத் திட்டங்கள் குறித்து சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். "விஜய் அறிவித்துள்ள இலவசங்களுக்கே மாதம் ஒரு லட்சம் கோடி தேவைப்படுகிறது. இந்தப் பணத்தை எங்கிருந்து எடுப்பீர்கள்? அண்ணன் சீர், மாமன் சீர் என எதையும் அரசுப் பணத்தில் தராமல் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டும்."

சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சீமான் பேசுகையில், "பாலியல் வன்கொடுமை செய்தவனை 10 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை எனச் சொல்லும் நிலை எனது ஆட்சியில் இருக்காது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நடுநிசியில் கூடத் தனியாகச் செல்லலாம். என் மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான பெண்களிடம் ஒருவனாவது அநாகரிகமாக நடந்து கொண்டான் எனச் சொல்ல முடியுமா?

தலைவர்களின் சிலைகள் கூண்டுகளில் இருந்து விடுவிக்கப்படும். சாதி என்ற எண்ணமே வராத அளவிற்குச் சமூகம் மாற்றப்படும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் முழுமையாக மீட்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது சூறாவளிப் பரப்புரைப் பயணத்தை வரும் மார்ச் 23-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகச் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.