பெண்களுக்கு ஜாக்பாட்... மகளிர் தினத்தில் அசத்தல் அறிவிப்புகள்? - தேர்தல் களத்தில் திமுக vs அதிமுக மோதல்!
தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் பெண்கள் பெரும்பான்மையாக இருப்பதால் (சுமார் 2.89 கோடி), அவர்களின் ஆதரவைப் பெறுவதே வெற்றிக்கான திறவுகோல் என அனைத்துக் கட்சிகளும் நம்புகின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே 1.31 கோடி பெண்களுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி என மொத்தம் 5,000 ரூபாயை வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
திமுகவின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் 'குலவிளக்குத் திட்டத்தின்' கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தவிர, பெண்களுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி போன்ற அதிரடி வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், வரும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று தமிழக அரசு சில 'சர்ப்ரைஸ்' அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி அல்லது கூட்டுறவு வங்கிக் கடன் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். பெண் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அல்லது கல்வி பயிலும் மாணவிகளுக்கான கூடுதல் ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெண்களே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், இந்தக் கட்சிகளின் "ஜாக்பாட்" அறிவிப்புகள் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.