பெண்களுக்கு ஜாக்பாட்... ஒரு குடும்பத்திற்கு 5 ஆடுகள் இலவசம் - "வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்" அரசாணை வெளியீடு!

 

தமிழகத்தில் உள்ள கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் "வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்" என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பின்படி, இத்திட்டத்திற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் 100 சதவீத மானியத்தில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாகச் சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,493 கிராமங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒரு ஊராட்சிக்கு 8 பேர் வீதம் மொத்தம் 30,000 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன.

ஒரு ஆட்டின் விலை ரூ.6,000 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பயனாளிக்கு 5 ஆடுகளுக்கான மதிப்பாக ரூ.30,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஆடுகளைப் பராமரிப்பதற்கான கூடுதல் செலவுகளையும் அரசே ஏற்கிறது: ஆடுகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்வதற்காக ரூ.1,500 வழங்கப்படுகிறது. ஆடுகளுக்குத் தீவனம் வாங்குவதற்கும், கொட்டகை அமைப்பதற்கும் முதற்கட்டமாக ரூ.2,500 வழங்கப்படும். ஆடுகளை ஒரு வருடம் சிறப்பாக வளர்த்த பிறகு, ஊக்கத்தொகையாக மேலும் ரூ.2,000 பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

மொத்தத் திட்ட மதிப்பீடாக ரூ.110 கோடி தேவைப்படும் நிலையில், முதற்கட்டமாக ரூ.109.75 கோடிக்கு அரசு நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கிராமப்புறப் பெண்களின் சுயசார்பு வாழ்க்கைக்கு இத்திட்டம் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.