ஜாக்பாட்.. ஒரே வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.3,200 வரை சரிவு!

 

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களையும் நகைப் பிரியர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களின் மாற்றத்தால் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வரலாறு காணாத வேகத்தில் சரிந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.13,700-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ. 1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. நேற்றைய நிலவரம் (ஜூலை 11)  தங்கம் விலையில் இன்று சவரனுக்கு மேலும் ரூ. 400 வரை குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,06,400 என்ற விலைக்கு சரிந்து விற்பனையாகிறது. இதன் மூலம், கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஒரே வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ. 3,200 வரை தங்கம் விலை படுபாதாளத்திற்கு இறங்கியுள்ளது.

சர்வதேசப் பொருளாதாரச் சூழல், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை மாற்றி வருவது போன்ற காரணங்களால் இந்தத் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலை வீழ்ச்சி நிலவரம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கணித்துள்ளனர். எனவே, நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இக்காலகட்டம் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.