ஜாக்பாட்.. ₹7,440 சரிவு - ரூ.98,000-ஐ நோக்கி சரியும் தங்கம் விலை!
கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தங்கத்தின் விலை, தற்போது கடந்த இரண்டு வாரங்களாக சரிந்து வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டுமே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,440 வரை குறைந்து, நகை வாங்குவோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவது மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, உலகளாவியச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்தத் திடீர் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னையின் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரப்படி, சந்தையில் சரிவுப் பாதை தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று முன்தினம் நிலவரம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,560-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களிலேயே கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3,360-ம் மளமளவெனச் சரிந்தது.
இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,140 என்ற அளவிலும், ஒரு சவரன் ரூ.1,05,120 என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், நுகர்வோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும் தற்போதைய மந்தநிலை நீடித்தால், ஆபரணத் தங்கத்தின் விலை விரைவில் சவரன் ரூ.1 லட்சத்திற்குக் கீழ் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அதே நேரத்தில், சர்வதேசச் சூழல் மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கணக்கில் கொள்ளும்போது, தங்கத்தின் விலை சவரன் ரூ.98,000-க்கு கீழ் செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.