பள்ளிகளில் கட்டாயம் "ஜெய் ஸ்ரீராம்"... பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைப் பேச்சு!
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய கங்காவதி தொகுதி பாஜாக எம்.எல்.ஏ.-வுமான கலி ஜனார்த்தன ரெட்டி, பள்ளிகளில் மாணவர்கள் வருகைப்பதிவின் போது கூற வேண்டிய வார்த்தை குறித்துப் பேசிய கருத்து, தேசிய அளவில் ஒரு புதிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜனார்த்தன ரெட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சில நடைமுறைகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்:
பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் பெயர்களை அழைத்து வருகைப்பதிவு எடுக்கும் போது, அதற்குப் பதிலாக மாணவர்கள் வழக்கமாகச் சொல்லும் "YES SIR" அல்லது "PRESENT SIR" என்ற ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்தமாக "ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிட்டுத் தங்களின் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் பேசினார். இந்த நடைமுறை மாணவர்களிடையே கலாச்சார மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதும் அவரது வாதமாக இருந்தது.
கல்வி நிலையங்களின் உள்ளே இத்தகைய மத ரீதியான கோஷங்களை அதிகாரப்பூர்வமாக நுழைக்கக் கோரும் பாஜாக எம்.எல்.ஏ.-வின் இந்த கருத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
காங்கிரஸ், தஜத (JDS) உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் இதற்குப் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளனர். "பள்ளிகள் என்பது அனைத்து மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் சமத்துவமாகப் பயிலும் பொது இடம். அங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோஷத்தைக் திணிப்பது மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும். ஆங்கில வார்த்தைகளில் விருப்பமில்லை என்றால் 'வணக்கம்' போன்ற பொதுவான வார்த்தைகளைப் பயன்படுத்தலாமே தவிர, மதக் குறியீடுகளைக் கொண்டு வரக்கூடாது" என அவர்கள் சாடியுள்ளனர்.
அதே வேளையில், பாஜாக மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தன ரெட்டியின் இந்த யோசனைக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நம் நாட்டின் பாரம்பரிய பெருமைகளை இளம்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க இத்தகைய ஆன்மீக வழிமுறைகள் தவறில்லை என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.
ஏற்கனவே கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம், பாடப்புத்தக மாற்றங்கள் போன்ற கல்வி சார்ந்த விஷயங்கள் பெரிய அளவில் அரசியல் புயலைக் கிளப்பியிருந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டியின் இந்த "ஜெய் ஸ்ரீராம்" வருகைப்பதிவு யோசனையும் அம்மாநிலக் கல்வித் துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் அடுத்த கட்டப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.