₹10 லட்சம் ரொக்கம், 2 கிலோ கஞ்சா பறிமுதல் - நெல்லையில் கஞ்சா கடத்திய ஜெயில் வார்டன் கைது!

 

திருநெல்வேலி அருகே வாகன சோதனையின் போது 2 கிலோ கஞ்சா மற்றும் ₹10 லட்சம் ரொக்கப் பணத்துடன் தூத்துக்குடி சிறை வார்டன் உட்பட இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி டவுன் - குற்றாலம் சாலையில் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனையிட்ட போது, அதில் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கஞ்சா மற்றும் ₹10 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

காரில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் முறப்பநாட்டைச் சேர்ந்த நவீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தமிழரசன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வார்டனாகப் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கிப் பொட்டலங்களாகப் பிரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றிய போது, கஞ்சா வியாபாரி எஸ்டேட் மணியின் கூட்டாளியான தினேஷுடன் தமிழரசனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினேஷ் மூலம் இவருக்குக் கஞ்சா கடத்தலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட எஸ்டேட் மணி மற்றும் தினேஷ் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த வாகன சோதனை நடத்தப்பட்டுச் சிறை வார்டன் சிக்கியுள்ளார். கைதான சிறை வார்டன் தமிழரசனை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இவரைப் போலீஸ் காவலில் எடுத்து மேலும் விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.