ஆபாசமாக மார்பிங்  புகைப்படம் – 'ஜெயிலர்-2' பட நடிகை போலீசில் புகார்!

 

பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகையான அன்னா ராஜனின் நிழற்படத்தை மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக மார்பிங்  செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ள சம்பவம் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இணையத்தில் உலா வரும் இந்த அசிங்கமான மார்பிங் புகைப்படங்கள் குறித்து நடிகை அன்னா ராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கேரளா காவல் துறை மற்றும் மாநில சைபர் குற்றப் பிரிவின் உயர் அமைப்பான சைபர் டோம் அதிகாரிகளிடம் முறைப்படி ஆதாரங்களுடன் அவசரப் புகார் அளித்துள்ளார். தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தனது நற்பெயரைக் கெடுக்க முயன்ற நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான மற்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்தப் புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'அங்கமாலி டைரீஸ்’ மற்றும் 'அய்யப்பனும் கோஷியும்'  உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திப் பிரபலமானவர் அன்னா ராஜன்.

தற்போது தமிழில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர்-2'  திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கு நேர்ந்துள்ள இந்த விபரீத சைபர் அத்துமீறலுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட சைபர் பிரிவு போலீசார், அந்த மார்பிங் புகைப்படத்தை முதலில் இணையத்தில் பதிவேற்றிய சமூக விரோதிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.