சோகம்: நூடுல்ஸ் சாப்பிட்ட 7 வயது சிறுமி திடீர் பலி ... அக்காவுக்கு தீவிர சிகிச்சை!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த பிகு (7) மற்றும் அவரது அக்கா திவ்யான்ஷி ஆகியோர் தாங்களாகவே நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர். பிற்பகலில் வீடு திரும்பிய தாய், இருவரும் உடல்நலக் குறைவுடன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பிகு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், மயங்கிய நிலையில் இருந்த அக்கா திவ்யான்ஷிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட விஷ உணவு காரணமாக இந்தச் சிறுமி உயிரிழந்திருக்கலாம் எனப் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய, சமைக்கப்பட்ட நூடுல்ஸ் மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜெய்ப்பூரில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது