காற்றில் மறைந்த கானக்குயில்... 17 மொழிகள்,  48000 பாடல்கள் பாடிய பிண்ணனி பாடகி ஜானகி மறைவு! 

 

தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரை உலகில் தனது காந்தக் குரலால் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த 88 வயது மூத்த பின்னணி பாடகி எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாகத் காலமானார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நிலையில், மீண்டும் ஏற்பட்ட பாதிப்பால் ஜானகி உயிர் பிரிந்ததாக அவரது பேத்தி இந்தத் துயரச் செய்தியை முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான தேனினும் இனிய பாடல்களைப் பாடி, பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருந்த இவரின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்த இசை உலகையும் நிலைகுலையச் செய்துள்ளது.

கடந்த 1938 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்த ஜானகி, 1957 இல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடகியாகத் தனது 19 வது வயதில் பாடத் தொடங்கித் திரை உலகில் அறிமுகமானார். தனது அசாத்தியமான பாடும் திறமையாலும், குழந்தை குரல் முதல் வயதான பெண் குரல் வரை மாறுபட்டுப் பாடும் தனித்துவமான ஆளுமையாலும் 17 க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடி இந்தியத் திரையிசை உலகில் அவர் தனக்கென ஒரு அழியாத முத்திரையைப் பதித்திருந்தார். பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே செந்தூரப்பூவே, தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகா பாடல்கள் மற்றும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா 1 பாடல் என்று 4 முறை தேசிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் கலைமாமணி விருது மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் வென்ற இவர், பெரும்பாலான இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமார், சங்கர் கணேஷ், இளையராஜா இசையில் பல அமரத்துவமான பாடல்களைப் பாடியுள்ளதுடன், ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருடனும் தடையின்றிப் பணியாற்றியுள்ளார். பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதத்தில் காலமான நிலையில், தற்போது ஜானகியின் மறைவுச் செய்தியைக் கேட்டுத் திரை உலகினரும் லட்சக்கணக்கான இசை ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.