உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம்: ஒரு கப் விலை ரூ.5 லட்சத்துக்கு மேல்... என்ன ஸ்பெஷல்?!
ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடிக்கும். ஆனால், ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சத்துக்கும் மேல் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஜப்பானில் தயாரிக்கப்படும் ‘பியாகுயா’ (Byakuya) என்ற ஐஸ்கிரீம் உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
விலையை உயர்த்தும் அரிய பொருட்கள்
செல்லாட்டோ (Cellato) நிறுவனம் தயாரிக்கும் இந்த ஐஸ்கிரீமின் விலை 8,73,400 ஜப்பானிய யென். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.5.2 லட்சம். இத்தாலியின் ஆல்பா பகுதியில் கிடைக்கும் அரிய வெள்ளை ட்ரஃபிள் காளான், பார்மிஜியானோ ரெஜியானோ சீஸ், சாகே தயாரிப்பில் கிடைக்கும் ‘சாகே லீஸ்’ மற்றும் உண்ணக்கூடிய தங்க இழைகள் இதில் சேர்க்கப்படுகின்றன.
ஒசாகாவில் உள்ள ரிவி உணவகத்தின் தலைமைச் சமையல் கலைஞர் தடாயோஷி யமடா இந்த ஐஸ்கிரீமை உருவாக்க உதவினார். சரியான சுவையை உருவாக்க ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.