ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வருகை !

 

வளைகுடா நாடுகள் மற்றும் ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் பல்வேறு சர்வதேச அரசியல் மாற்றங்களுக்கு இடையே, உலக நாடுகளின் கவனம் தற்பொழுது பாரதத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள சனே தகாய்ச்சி, அடுத்த மாதம் ஜூலை 1 முதல் 3ம் தேதி வரையிலான நாட்களில் முதன்முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல்   அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மெகா சுற்றுப்பயணத்தின் போது தலைநகர் புதுடெல்லிக்கு வருகை தரும் ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பாரத பிரதமர்  மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முன்னதாக இந்த ஆண்டுக்கான இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடானது அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் பிரதமர் சனே தகாய்ச்சியின் பல்வேறு உள்நாட்டுப் பணிகள் காரணமாகப் போதிய கால அவகாசம் இல்லாததால், அவரது கவுகாத்தி பயணம்   ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த உயர்மட்ட உச்சி மாநாட்டுப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் டெல்லியிலேயே முழுமையாக நடத்தப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன