ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி!
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்த சனே தகாய்ச்சி, தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக அடுத்த மாதம் (ஜூலை 1 முதல் 3 வரை) இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்படும் இந்த உயர்மட்டப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான 'சிறப்பு உலோகம் மற்றும் உலகளாவிய கூட்டுறவை' மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையவுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தரும் ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இச்சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதாரம், குறைக்கடத்திகள் , செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.
முன்னதாக, இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்கும் இந்த வருடாந்திர உச்சி மாநாட்டை அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான ஜப்பானின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் கவுகாத்தி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் தற்போது அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருவதாலும், அவருக்குப் பல்வேறு உள்நாட்டுப் பணிப் பொறுப்புகள் இருப்பதாலும், அவர் இந்தியாவில் தங்கும் காலம் மிகவும் சுருக்கப்பட்டுள்ளது. இந்த இறுக்கமான கால அட்டவணை மற்றும் தலைநகருக்கு வெளியே செல்வதில் உள்ள தளவாடச் சிக்கல்கள் காரணமாகவே கவுகாத்தி பயணம் கைவிடப்பட்டு, உச்சி மாநாட்டின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் புதுடெல்லியிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டிலும், அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கவுகாத்தி வரவிருந்த நிலையில், சிஏஏ போராட்டங்கள் காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கவுகாத்தி பயணம் ரத்து செய்யப்பட்டாலும், டெல்லியில் நடைபெறும் மோடி - தகாய்ச்சி இடையேயான பேச்சுவார்த்தை இருநாட்டு உறவில் புதிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.