உலக அரங்கில் புதிய ராஜதந்திர நகர்வு - உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி!

 

இந்திய - ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான பல்லாண்டு கால நட்புறவையும், சர்வதேச உத்தேசக் கூட்டாண்மையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ஜப்பான் பிரதமர் சனாயே தகாயிச்சி அடுத்த வாரம் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று, ஜப்பான் பிரதமர் சனாயே தகாயிச்சி வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இந்தியாவில் தங்கிப் பல்வேறு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 16-வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

ஜப்பானின் வரலாற்றுப் பக்கங்களில் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகப் கடந்த 2025 அக்டோபரில் பொறுப்பேற்று, பின்னர் 2026 பிப்ரவரி பொதுத்தேர்தலிலும் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்ற சனாயே தகாயிச்சி, இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணம் இதுவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்றிருந்தபோது 15-வது உச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று நாள் உச்சி மாநாட்டின் போது, இரு நாடுகளின் தலைவர்களும் தங்களின் 'சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை'  மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர். இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஜப்பானின் புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பக் கூட்டுப் பணிகள் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய புவிசார் அரசியல் சூழல்கள், சீனக் கடற்படையின் ஆதிக்கம் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவது குறித்தும், 'சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்' கொள்கை குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.