ரூ.350 கோடிக்கு ஜெயலலிதாவின் இல்லத்தை வாங்கும் முதலமைச்சர் விஜய்?!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'வேதா நிலையம்' இல்லத்தை, தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் ரூபாய் 350 கோடிக்கு வாங்குவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய முதலமைச்சர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் சுமார் 18.5 கிலோமீட்டர் தூரம் பயணித்துத் தலைமைச் செயலகத்திற்கு வருகிறார். அவர் பயணிக்கும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதால், பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் காரணமாக, நகரின் மையப்பகுதியான போயஸ் கார்டனுக்குக் குடியேறுவதன் மூலம் பொதுமக்களுக்கான இடையூறுகளைக் களைந்து, பாதுகாப்பு நெரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாக இந்தச் செய்திகள் இறக்கைகட்டிப் பறக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் இத்தகைய தகவல்கள் உலா வந்தாலும், சட்டப்பூர்வமாகப் போயஸ் கார்டன் இல்லத்தின் நிலைப்பாடு முற்றிலும் வேறாக உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், முந்தைய அதிமுக அரசு இந்த இல்லத்தைக் தற்காலிகமாகக் கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற முயன்றது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அரசுடைமையாக்கப்பட்ட அந்த உத்தரவைச் செல்லாது என ரத்து செய்தது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோர் இந்தச் சொத்தின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்டு, இல்லத்தின் சாவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வருமான வரி மற்றும் செல்வ வரி நிலுவைத் தொகைகளுக்காக இந்தச் சொத்துக்களின் மீது சில சட்ட விவாதங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
முதலமைச்சர் விஜய் தரப்பில் இருந்தோ அல்லது ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் தரப்பில் இருந்தோ இது போன்ற ஒரு ரூபாய் 350 கோடி சொத்து விற்பனைப் பேச்சுவார்த்தை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ இதுவரை வெளியாகவில்லை. எனவே, பரவி வரும் இத்தகவல்கள் யாவும் தற்போதைக்கு ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளாகவே பார்க்கப்படுகின்றன.