நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க கட்டிபிடித்த ஜெயராஜின் உறவினர்கள்... சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் காவல் மரண வழக்கில், இன்று மாலை 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதும், நீதிமன்ற வளாகத்தில் ஜெயராஜின் உறவினர்கள் ஒருவரையொருவர் கண்ணீர்மல்க கட்டிப்பிடித்து தீர்ப்பை வரவேற்றனர்.
தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கைக் 'கொடூரமான செயல்' எனக் குறிப்பிட்டு "சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, பழிவாங்கும் நோக்கில் தந்தை மற்றும் மகனை அடித்துக் கொன்றுள்ளது சமுதாயத்தில் மிகப்பெரிய கொடுமையாகும்" என்றார்.
"காவல் நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகக் கொடுமையானவை. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதே சரியான நீதியாக இருக்கும்," என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான பால்துரை, விசாரணையின் போதே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கின் போது கடை திறந்திருந்த விவகாரத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். 6 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வந்த ஜெயராஜின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள், இந்தத் தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் மல்க நீதிமன்ற வளாகத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.