ஜீவானந்தம் சிலை குப்பையில் வீச்சு - அதே இடத்தில் புதிய சிலை அமைக்கச் சீமான் வலியுறுத்தல்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொதுவுடைமைத் தலைவர் ப. ஜீவானந்தத்தின் மார்பளவுச் சிலை குப்பையில் வீசப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர், தமிழ்நாட்டில் பொதுவுடைமைத் தத்துவத்தை விதைத்தவர் மற்றும் தமிழை ஆட்சிமொழியாக்க முதன்முதலில் குரல் கொடுத்த பெருந்தமிழர் ஜீவானந்தம். சுடுகாட்டில் கூரை அமைத்து, ஒற்றை வேட்டியோடு புத்தகங்களின் நடுவே உண்மையோடும் எளிமையோடும் வாழ்ந்த ஒரு தூய அரசியல்வாதியின் சிலையை அலட்சியமாகக் குப்பையில் வீசியது ஏற்க முடியாத பெருங்கொடுமை எனச் சீமான் தனது அறிக்கை வாயிலாக வேதனை தெரிவித்துள்ளார்.
மாபெரும் தலைவரின் சிலையை மதிப்பின்றி குப்பையில் வீசிய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீவானந்தத்தின் 119-வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதே இடத்தில் அவருடைய புதிய சிலையை அரசு உடனடியாக நிறுவ வேண்டும்.