மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் ஜெனிபர் பாரெட்டோ... பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் திருமணமான பெண் - வரலாற்றில் சாதனை!
2026-ஆம் ஆண்டிற்கான 75-வது ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த 27 வயதான ஜெனிபர் பாரெட்டோ (Jennifer Barreto) வென்றுள்ளார். புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலாட் கொலிசியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இறுதிச் சுற்றில், உலகின் 116 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அவர் இந்தப் புகழ்பெற்ற மகுடத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம் மிஸ் யுனிவர்ஸ் வரலாற்றில் பட்டத்தை வென்ற முதல் திருமணமான பெண் மற்றும் தாய் என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோவின் பாத்திமா போஷ், புதிய பிரபஞ்ச அழகியான ஜெனிபர் பாரெட்டோவிற்கு மகுடம் சூட்டினார். இதன் மூலம் புவேர்ட்டோ ரிக்கோ நாடு 6-வது முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் டொமினிகன் குடியரசின் மெலிசா நுனெஸ் முதல் ரன்னர்-அப் (2-வது இடம்) பட்டத்தையும், வெனிசுலாவின் கிளாரா வேகாஸ் கோட்ஸ் இரண்டாவது ரன்னர்-அப் (3-வது இடம்) பட்டத்தையும் வென்றனர். பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்து அழகிகள் முறையே 4 மற்றும் 5-வது இடங்களைப் பிடித்தனர்.
இறுதிச் சுற்றில், “தற்போதைய சூழலில் உலகிற்குத் தலைவர்களிடமிருந்து மிகவும் தேவைப்படுவது என்ன?” என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெனிபர் பாரெட்டோ, “மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்ட தலைவர்களே இன்று உலகிற்குத் தேவை. மற்றவர்களை விமர்சிப்பதை விடுத்து, தங்களது கொள்கைகளில் உறுதியாக நின்று சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்களே சிறந்த தலைவர்கள்” எனக் கூறிய பதில் நடுவர்களின் மனதை வென்றது.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, ‘தி ரேடியன்ஸ் ஆஃப் அன் எடர்னல் லெகசி’ என்ற புதிய சிறப்பு மகுடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிரபல நகை வடிவமைப்பாளர் ஜார்ஜ் விட்டல்ஸ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ‘மைசன் டி’ஓர்’ நகை நிறுவனம் இணைந்து உருவாக்கிய இந்த மகுடத்தில், 18 காரட் வெள்ளைத் தங்கத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரம்மாண்ட விழாவைத் தொலைக்காட்சித் தொகுப்பாளர் மரியோ லோபஸ் மற்றும் 2022-ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் ஆர்'போனி கேப்ரியல் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கேரளாவின் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான கசியா லிஸ் மெஜோ பங்கேற்றார். சட்டம் பயிலும் மாணவியும், பரதநாட்டியக் கலைஞருமான இவர் முதல் 30 இடங்களுக்குள் முன்னேறி அசத்தினார். இருப்பினும், நீச்சலுடைச் சுற்றுக்குப் பிறகு முதல் 12 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
2024-ல் ‘மிஸ் டீன் திவா’ பட்டம் வென்ற மெஜோ, 2025 ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல்’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். இந்த ஆண்டு ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்ற முதல் கேரளப் பெண் என்ற பெருமையுடன் சர்வதேச மேடையில் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தார். முன்னதாக இந்தியா சார்பில் 1994-ல் சுஷ்மிதா சென், 2000-ல் லாரா தத்தா மற்றும் 2021-ல் ஹர்னாஸ் சந்து ஆகியோர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.