திக், திக் நிமிடங்கள்... ஓடுபாதையை விட்டு விலகி புல்வெளியில் தரையிறங்கிய விமானம்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
இங்கிலாந்தில் பலத்த புயல் காற்று காரணமாக, பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி புல்வெளிக்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த 190 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
பலத்த காற்றில் நிலைதடுமாறிய விமானம்
இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து ஜெட்2 (Jet2) நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம், இங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்துக்கு வந்தது. அப்போது ‘போலோ’ புயல் காரணமாக பலத்த காற்று வீசியதாகக் கூறப்படுகிறது.
விமானம் தரையிறங்கியபோது காற்றின் வேகத்தால் நிலைதடுமாறியது. இதனால் விமானத்தின் டயர்கள் ஓடுபாதையை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளிக்குள் சென்றன. இதைப் பார்த்ததும் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விமானிகள் சாதுரியம்
இக்கட்டான சூழலில் விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 190 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. மோசமான வானிலை நிலவும் நேரங்களில் விமானங்களைத் தரையிறக்குவதில் ஏற்படும் சவால்களை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.