சென்னையில் 250 சவரன் நகைகளை ஏமாற்றிய நகைக்கடை அதிபர்... கேரளாவில் கைது!
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையைச் சேர்ந்தவர் சபீயா. 43 வயதான இந்த பெண்மணி, கடந்த 2021-ம் ஆண்டு சென்னை தியாகராயநகர் பாண்டிபஜாரில் புதிதாகத் திறக்கப்பட்ட 'கோல்டு ஹவுஸ்' என்ற நகைக்கடைக்குச் சென்றுள்ளார். அந்தக் கடையின் திறப்பு விழாவின் போது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், அதுபற்றி பேசுவதற்காக அவர் அங்கு சென்று கடையின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த 45 வயது பிஜோ ஜோஸ் என்பவரை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது சபீயா தான் சொந்தமாக ஒரு வீடு வாங்கப் போவதாகவும், அதற்குப் பெருந்தொகை தேவைப்படுவதால் தன்னிடம் உள்ள 250 சவரன் நகைகளை நல்ல இடத்தில் அடகு வைத்துப் பணம் பெற்றுத் தருமாறும், அதற்கு உதவி செய்யுமாறும் நகைக்கடை உரிமையாளரான பிஜோ ஜோஸிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரும் நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி உதவுவதாக உறுதியளித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சபீயா, தனது 250 சவரன் நகைகளையும் அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
ஆனால், கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைப் பெற்றுக் கொண்ட பிஜோ ஜோஸ், சபீயாவுக்குப் பணமும் வாங்கித் தராமல், நகைகளையும் திருப்பிக் கொடுக்காமல் திடீரென கடையைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த சபீயா, இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, பிஜோவைத் தேடி வந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த பிஜோ ஜோஸ் பிடிபட்டார். சென்னை அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.