நகைக்கடை சுவரை துளையிட்டு 3  கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி பகுதியில் சரவணன் என்பவர் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் காலையில் வழக்கம்போல் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பின்புறச் சுவரில் பெரிய துளையிடப்பட்டு இருந்ததைக் கண்டு நிலைகுலைந்து போனார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 கிலோ வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

கொள்ளையர்கள் கடையினுள் இருந்த இரும்பு லாக்கரை உடைக்கப் பெரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த லாக்கரைத் திறக்கும் சாவி அருகிலேயே ஆணியில் தொங்கிக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். லாக்கரை உடைக்க முடியாத விரக்தியில் வெளியே இருந்த வெள்ளிப் பொருட்களை மட்டும் மூட்டையாகக் கட்டிக்கொண்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதன் காரணமாக லாக்கர் உள்ளே பத்திரமாக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ தங்க நகைகள் நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுறை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.