சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு... ஜார்க்கண்ட்டில் மாணவர் தடியடி காரணமாக பரபரப்பு!
அரசு பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து பாஜ எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்ட் சட்டப்பேரவை ஒருநாள் முன்னதாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் நேற்று முன்தினம் சட்டப்பேரவை நோக்கி பேரணி சென்ற போது மாணவர்களை தடுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் விரட்டியடித்தனர். இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடியதும், போலீசாரின் தடியடி சம்பவத்தை கண்டித்து பாஜ எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும், கூச்சல் குழப்பம் நிலவிய நிலையில், பணி நியமனத் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிஐடி விசாரணை நடந்து வருவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார். மேலும் அரசு முன்மொழிந்த அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.