ஜிப்மர் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை! சிக்கிய உருக்கமான கடிதம்
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.டி. நுரையீரல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த 26 வயது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வெங்கட்டா நகரில் பெற்றோருடன் வசித்து வந்த அந்த மாணவி, தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும், கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு பெற்றோருடன் உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் சந்தேகமடைந்தனர். கதவை திறக்க முடியாத நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவு திறக்கப்பட்டபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து வந்த பெரியகடை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது அறையில் ஒரு டைரியில் எழுதப்பட்டிருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் தனது முடிவுக்கு யாரையும் பொறுப்பாக்க வேண்டாம் என்றும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவர் எழுதியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.