ரூ.755 கோடி தாய்மாமன் தங்கமோதிரம் டெண்டரை வெறும் 1 பைசா சேவைக் கட்டணத்தில் கைப்பற்றியது ஜாய் ஆலுக்காஸ்.. சர்ச்சையைக் கிளப்பும் அதிமுக !
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின்கீழ் 4.41 லட்சம் தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்யக் கோரப்பட்ட ரூ.755.83 கோடி மதிப்பிலான டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த தொகைக்கு ஏலம் கோரி முதலிடம் (L1) பிடித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையில் 22 கேரட் (916 ஹால்மார்க்) தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டம் வரும் செப்டம்பர் 15 (அண்ணா பிறந்தநாள்) அன்று தொடங்கப்படவுள்ளது.
தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் முத்திரை, பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்துக் கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து வெறும் 1 பைசா மட்டுமே சேவைக் கட்டணமாகக் கோரி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் L1 ஏலதாரராகத் தேர்வாகியுள்ளது.
ஏலத்தில் பங்கேற்ற மற்ற நகை நிறுவனங்கள் செய்கூலி மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.400 முதல் ரூ.15,000 வரை கோரியிருந்த நிலையில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் இந்த அணுகுமுறை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தூதராக முதல்வர் விஜய் விளம்பரங்களில் நடித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அதிமுக ஐடி விங், இதன் சகோதர நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் 1 பைசா மட்டுமே கோரியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது என விமர்சித்துள்ளது.
தமிழக அரசுப் பங்குகளைக் கொண்ட 'டைட்டன்' நிறுவனத்திடம் இந்த விலையை ஈடுசெய்ய அரசு கோரியதா அல்லது தனியார் நிறுவனத்திற்குத் தருவதற்குப் பதிலாக அரசே நடத்தும் நிறுவனத்திடம் இத்திட்டத்தை ஒப்படைக்கலாமே என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.