undefined

‘ஜெ’ பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து... திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?!

 

பழம் நழுவி பாலில் விழுந்த கதை எல்லாம் கடந்த இரு தினங்களாக எப்படி சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைக் குவித்தது என்பதைப் பார்த்திருப்பீர்கள். இப்போது ஓபிஎஸ் தான் சீமான் மாநாடு, விஜய் மாநாடு என்று சகலத்தையும் தாண்டி அதிகளவில் ட்ரோல் செய்யப்படுகிறார். செங்கோட்டையன் ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டிலிருந்து அகற்றிவிட்டு விஜய் படத்தை வைத்ததற்கே அதிமுக தொண்டர்கள் கொதித்துள்ள நிலையில், ஓபிஎஸ் திமுகவில் இணைய தயாராகி வருவதாகவும், கத்திரிக்காய் முற்றட்டும் என்று தொண்டர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் றெக்கைக் கட்டி பறக்கிறது. 

அதிமுகவிலிருந்து தான் நீக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு வருடமும் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து ஓ.பி.எஸ். மரியாதை செலுத்துவதை வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல் இந்த வருடமும் சென்னையில் ஜெ பிறந்தநாளன்று ஓபிஎஸ் மரியாதை செலுத்துவார் என்று பிப்ரவரி 19ம் தேதியே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், நேற்று திடீரென அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

புதிய அறிவிப்பின்படி, அவர் சென்னைக்கு வராமல், போடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மட்டும் மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்ஸின் இந்தத் திடீர் பின்வாங்கல் தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸின் நெருங்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஏற்கனவே திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். இந்தச் சூழலில் ஓபிஎஸ் மட்டும் தனியாக இயங்குவது கடினம் என்பதால், அவரும் ஆளுங்கட்சிப் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதேவேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட ஓபிஎஸ், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியைத் தவிர்ப்பது, அதிமுகவின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருவதையும் அவர் புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வதையும் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது. இன்று சசிகலா பசும்பொன் பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ் சசிகலா பக்கம் பம்முவாரா? அல்லது திமுகவில் இணைவாரா என்று அவரது ஆதரவாளர்கள்(?) எதிர்பார்த்துள்ளனர்.